சங்கீதமே உன் ஜீவன்...எங்கும் என்றும்...இந்தத் தேகம் மறைந்தாலும்...இங்கே தங்குவாய்... இசையாய் நீ மலர்வாய்
மண் மறைந்த நமது அபிமான பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனுக்குக என் நினைவாஞ்சலி
இசைப் பயணங்கள் முடிவதில்லை...
சங்கீதமஂ ஒரு சாகரம், அதில் நீந்தத் துடிப்பவரோ, ஆயிர மாயிரம்,
எங்கும் அதற்கு ஒரு வரவேற்பு, கற்பவற்க்கோ என்றும் பரவசம்
தங்கு தடையின்றி நீந்தி, கரை காண்பவர்கள் அபூர்வம் சிலரே,
சங்கீதமும் திரையுலகும் ஒரு நாணயத்தின் இருமுகங்க ளன்றோ.
திரை உலகில் பாடவரும் வாய்ப்பு, திறமைக்கு தரும் நற்சான்றே,
விரைந்து வந்து மறைந்து போன பாடகர்கள் எத்தனை எத்தனை,
கரை தாண்டி வந்தாய், கலைப் பொக்கிஷம் ஆகி நிறைந்தாய் நீ,
வரையரை தாண்டி, அரை நூற்றாண்டும் தாண்டி பாடி நின்றாய்.
ஆயிரம் நிலவை வரவழைத்துத் துவங்கிய நீ பாடியதோ நாற்பது,
ஆயிரம் பாடல்கள் ,ஈரேழு பதிநான்கு மொழிகளில் பாடி வந்தாய்,
வேய் குழலில் துவங்கி,தாய்மொழியும்,தமிழும் உவந்து பாடினாய்,
மெய் சிலிர்க்கப் பாடவே கோலிவுட்டும் பாலிவுட்டும்,மகிழ்ந்ததே,
நடிகரின் குரலோடி ணைவது கடினமே இரண்டறக் கலந்தாய் நீ
துடிக்கும் காதலும் ஆடலும்,உன் குரலின் இனிமைக்கு மகுடமாக
அடித்தளமாகி நின்றாய் நீ, நிலவுகளும் உன்பாடலில் விடிந்ததே,
நடிகனுமானாய், நிஜவாழ்விலும் நடிக்காமல், வாழ்ந்து காட்டினாய்!
புகழீட்டிய போதும் எளிமை,கருணை, இவைக்கும் உவமையானாய்
மகிழ வைத்தாய் என்றும் ,கூடவே,சோகமும் குரலில் தந்தாய் நீ,
அக முவந்து மனதில் சுமந்து நடந்தோம், உன்பாடல்களைப் பாடியே
நிகரிலையே உனக்கும்,இளைய நிலாவிற்கும்,வான் நிலாவிற்குமே.
வைரமுத்துவின் கவிதைக்கு குரல் கொடுத்தாய், உயிர் கொடுத்தாய்,
கர்நாடக இசை பயிலாது எமக்கொரு சங்கராபரணம் பொழிந்தாய்,
ஒரு காதல் ரோஜாவைத் தேடிச் சென்றாய், கண்ணீரை வரவழைத்தாய்,
ஒரு மலரின் மெளனத்தை உன் குரலால் மையலில் பேசவைத்தாய்.
எத்தனை முறை ஆயர்பாடி கண்ணனை என்முன் நிறுத்தி மகிழ்ந்தாய்,
நித்தமும் எமை துக்கத்தி லாழ்த்தியே, நிலாப் பயணமானாய் நேற்று,
மொத்தமாக நீ போயினும், உனக்கே நீயே அஞ்சலி பாடினும் உன்குரல்,
நெஞ்சில் மாயாது, இனிதே குடியிருக்கும், உன் பயணஙகள் ஓய்வதில்லை!
No comments:
Post a Comment